Sunday, March 24, 2013

புதிய மாணவர் வரவேற்பு ஓர் பார்வை


சில ஆண்டுகள் கல்வியே கருந்தனமாய் கற்று உயர்தரத்தில் உயர் பெறுபேறு பெற்று புதிதாக எமது பீடத்திற்கு உள்நுழையும் உயர்தரப் பிரிவு அணியினரை வரவேற்கும் முகமாக எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டதே “இந்துவர” என்றழைக்கப்படும் புதிய மாணவர்  வரவேற்பாகும்.புதிதாய் இணைந்துள்ள மாணவர்கள் பலருக்கு சங்கீதம்,கவிதை எழுதும் திறன்,சிறுகதை எழுதும் ஆற்றல் இவ்வாறான கல்வி சாராத ஆற்றல்கள் இருக்கும்.உயர்தரத்தின் சுமையினால் இக் கல்வி சாரா செயற்பாடுகளில் ஆர்வம் பெருமளவு குறைந்திருக்கும்.இவ்வாறு மாணவர்களிடையே மறைந்துள்ள திறமைகளை தூசு தட்டி வெளிப்படுத்தும் ஒரு களமாக இப் புதிய மாணவர் வரவேற்பு அமையப்போகின்றது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மருத்துவ பீடத்தில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் அணியினது மிக முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி அமைந்துள்ளது.ஒவ்வொரு போட்டிகளுக்கும் உரிய ஒருன்கினைப்பாளர்கள், அலங்கரிப்பு பகுதி,ஒலி ஒளி அமைப்பு,உபசாரப் பகுதி என பல்வேறு பிரிவுகளில் எமது அணியின் மாணவர்கள் இருநூறு பேரும் இப் புதிய மாணவர் வரவேற்பு வெற்றிகரமானதாக அமைவதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.கடுமையான கல்விச் சுமையின் மத்தியிலும் எம் அணியினர் இவ் வரவேற்பு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்வதற்கு தேவையான பணத்தை திரட்டுவதற்காக பேனா விற்பனை நாடளாவிய ரீதியில் மேற்கொள்கின்றார்கள்.அத்துடன் இப் புதிய மாணவர் வரவேற்பானது புகுமுக மாணவர்களுக்கு மருத்துவ பீடம் என்பது வெறுமனே கல்வி கற்பதற்குரிய இடமல்ல இது கல்வியுடன் சமூகப் பொறுப்பும் தலைமைத்துவப் பண்பும் கொண்ட சீரிய மருத்துவர்களை உருவாக்கும் இடம் என்பதை உணர்த்துவதாகவும் அமையும்.

இந்துவர என்ற சிங்களச் சொல்லின் அர்த்தம் நீல அல்லி என்பதாகும்.அதாவது பல இதழ்கள் ஒன்றாகச் சேர்ந்து எப்படி ஒரு அழகிய நீலோற்பலத்தை உருவாகுகின்றதோ அது போல் உயர்தர அணி மாணவரும்   உயர்தர அணி மாணவரும் இணைந்து செயற்பட்டு புதிய மாணவர் வரவேற்பை சிறப்பாக இடம்பெறச் செய்வோம் என்பதாகும்.ஆகவே நாளை ஆரம்பிக்கவிருக்கும் புதிய மாணவர் வரவேற்பில் புதுமுக மாணவர்கள் சிறப்பாக செயற்பட எமது அணி சார்பான வாழ்த்துக்களை தெரிவித்து அமைகிறேன்.

                                                      -அபிமன்யு-

1 comment: